Sunday, March 29, 2020

கோவிலில் கூட்டுக் குடும்பம்! thanks to dinamalar

கோவிலில் கூட்டுக் குடும்பம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29மார்
2020
00:00
ஒரு காலத்தில், இந்தியாவில், வீட்டுக்கு வீடு இருந்த கூட்டுக் குடும்ப முறை, இன்று, மிக அரிதாகி விட்டது. தம்பிகளுக்காக, அண்ணன் விட்டுக் கொடுப்பது, பெற்றவர்களை பராமரிப்பது, அண்ணியை, தாயாக மதிப்பது போன்ற உயர்ந்த எண்ணங்கள், அன்றைய குடும்ப முறையில் இருந்தது.
அயோத்தியை ஆண்ட, தசரதரின் குடும்பம், மிகப்பெரிய கூட்டுக் குடும்பமாக இருந்தது. குடும்பத் தலைவர், தசரதர்; அவரது மனைவியர், கோசலை, கைகேயி மற்றும் சுமித்திரை.
பிள்ளைகளான, ராமன், லட்சுமணன், பரதன் மற்றும் சத்ருக்கனன்; இவர்களது மனைவியரான சீதா, ஊர்மிளா, மாண்டவி மற்றும் சுருதகீர்த்தி என, அனைவரும், ஒரே கூட்டுக் குடும்பமாக வசித்தனர். ராம சகோதரர்களுக்கு, சுக்ரீவன், அனுமன் மற்றும் ஜாம்பவான் என்ற நண்பர்களும் உண்டு.
அயோத்தியில், ராமர், தன் குடும்பத்துடன் காட்சி தருகிறார். தமிழகத்தில், இவரது குடும்பத்தைக் கண்குளிரக் காண வேண்டுமானால், கும்பகோணம், ராமசுவாமி கோவிலுக்கு செல்ல வேண்டும். ஏப்ரல், 2, ராம நவமியன்று, இவர்களைத் தரிசித்து வரலாம்.
விஷ்ணுவை நினைத்து, புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார், தசரதர். அதன் பயனாக, விஷ்ணுவையே மகனாக பெற்றார். அவரே, ராமன். இதையடுத்து, விஷ்ணுவின் கையிலுள்ள சக்கரம், பரதன் என்ற பெயரில், ராமன் பிறந்த மறுநாள், தசரதரின் இரண்டாம் மனைவி, கைகேயி வயிற்றில் அவதரித்தது.
விஷ்ணுவின் படுக்கையான, ஆதிசேஷன் என்ற பாம்பு, தசரதரின் மூன்றாம் மனைவி, சுமித்திரையின் வயிற்றில், லட்சுமணராகவும், அவரது சங்கு, சத்ருக்கனன் என்ற பெயரிலும் பிறந்தது. சுமித்திரைக்கு மட்டும் இரண்டு பிள்ளைகள்.
ராமனுக்கும், லட்சுமணனுக்கும், மிதிலை மன்னர், ஜனகரின் புதல்விகளான, சீதையும், ஊர்மிளாவும் மனைவி ஆயினர். பரத, சத்ருக்கனருக்கு, ஜனகரின் தம்பி, குசத்வஜனின் மகள்களான, மாண்டவியும், சுருதகீர்த்தியும் மனைவியாயினர்.
ராவண வதம் முடிந்ததும், குடும்பம் புடைசூழ பட்டம் சூடிக்கொண்டார், ராமர். அதன் அடிப்படையில் கோவில் எழுந்தது. கும்பகோணத்தில், இதே அமைப்பில், ராம குடும்பத்துக்கு, ரகுநாத நாயக்கர் என்பவர் கோவில் கட்டினார்.
வீணையுடன் காட்சி அளிக்கிறார், அனுமன். கையில், ராமாயண சுவடி உள்ளது. ராம சரிதத்தை அனுமன், வீணை இசைத்துப் பாடுவதாக ஐதீகம். ராமனின் இடதுபுறம், சத்ருக்கனன், சாமரம் வீசியபடியும், வலதுபுறம், பரதன், குடை பிடித்தும் நிற்கின்றனர். லட்சுமணன், வில்லுடன் பாதுகாவல் செய்கிறார்.
கும்பகோணம் பெரிய கடை வீதியில் கோவில் உள்ளது. ராம குடும்பத்தை தரிசித்து, மீண்டும் கூட்டுக் குடும்ப முறை நம் தேசத்தில் தழைக்க வேண்டி, தரிசித்து வரலாம்.

தி. செல்லப்பா

No comments:

Post a Comment