Saturday, March 28, 2020

கொரானா கற்றுத் தரும் பாடங்கள் thanks to tamil and vedas

கொரானா கற்றுத் தரும் பாடங்கள்! (Post No.7747)

by Tamil and Vedas
WRITTEN BY S NAGARAJAN                     
Post No.7747
Date uploaded in London – – 27 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ச.நாகராஜன்
கொள்ளை நோயான - கொடிய நோயான - நாம் இதுவரை அறிந்திராத விசித்திர நோயான – கொரானா (Corona  Virus) கற்றுத் தரும் பாடங்கள் பல.
ஒவ்வொரு மனிதனும் பல பாடங்களை கொரானாவிடமிருந்து கற்றுக் கொள்கிறான்.
சில பாடங்கள் இதோ:
நமக்கும் மேலே ஒருவன் இருக்கின்றான்; அவன் நடத்தும் நாடகத்தில் நமக்குக் கொடுக்கப்படும் பாத்திரங்களை நாம் ஏற்கும் போது பல சமயம் மகிழ்கிறோம்; பல சமயம் சொல்லவொண்ணா துக்கத்தையும் பயத்தையும் அடைகிறோம்.
மனிதகுலம் ஒன்றே. ஜாதி, மதம், இனம், மொழி, நாடு , ஆண் பெண் என்ற பால் வேறுபாடு, பணக்காரன், ஏழை என்ற அந்தஸ்து வேறுபாடு போன்றவை அர்த்தமில்லாதவை; அவை பெரிய இடருக்கு முன்னால் குன்றிக் குறுகிப் போகின்றன.
விஞ்ஞானம் வளர வளர வியப்பூட்டும் வளர்ச்சியைப் பெற்றாலும் கூட, விளக்கமுடியாத விஷயங்கள் ஏராளம் உள்ளன? ஏன், - இப்போது ஏன் - என்ற கேள்விக்கு விடையே இல்லை.
அரசு மட்டும் ஒரு தேசத்தில் உள்ளவர்க்கு நல்லதைச் செய்ய முடியாது; தனி மனிதனும் அரசுக்கு நூறு சதவிகிதம் ஒத்துழைக்க வேண்டும். இல்லையேல் இடரை வெல்ல முடியாது.
படித்தவர்கள் பாமரரை விட ஒழுக்கமின்றி நடப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட முடிகிறது. ஏன் இப்படி என்ற கேள்விக்கு விடையே இல்லை.
தனிமனித ஒழுக்கம் அனைத்து அறிவையும் விடச் சிறந்தது. அதைக் கொண்டவர்களே நல்ல மனிதர்கள்.
இந்தப் பேரிடரிலும் கூட ஆதாயம் பார்க்க நினைப்பவர்களை என்ன சொல்வது? இதிஹாஸ புராணம் கூறும் ‘இரக்கமில் அரக்கர்கள்’ இவர்கள் தானோ?!
ஊடகங்கள் பெரும்பாலும் நல்லனவற்றையே செய்வதைப் பாராட்டும் போது பரபரப்பூட்டியே பழக்கப்பட்ட ஊடகங்கள் பொய்ச் செய்திகளைப் பரப்புவதைப் பார்க்கும் போது பெரும் வியப்பை அடைய வேண்டியதிருக்கிறது.
வதந்திகளைப் பரப்புவதில் வாழ்க்கையை ஓட்டுபவர்கள், தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் பேரிடர் பாதிக்கும் என்று எண்ணுவதில்லை என்பதை நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கிறது.
ஒரு கணத்தில் பீதியைக் கிளப்பி மரண பயத்தை ஏற்படுத்தி உலக நாட்டு மக்கள் அனைவரையும் கலக்கமுறச் செய்ய முடியும்; பல்வேறு துறைகளை முடக்க முடியும்; வீட்டுக்குள்ளேயே அனைவரையும் முடங்கிக் கிடக்கச் செய்ய முடியும்; நாளை யாருக்கு என்ன நடக்குமோ என்ற நிலையற்ற தன்மையை ஏற்படுத்த முடியும்; நாடுகளின் அடிப்படை பொருளாதாரத்தையே ஆட்டி விட முடியும் - முடிவற்ற ஒரு பட்டியலை ஒரு கணத்தில் கொரானா தர முடியும் என்பது என்ன ஒரு விசித்திரம்?!
தத்துவம் கூறுபவர்களை விட, சாஸ்திர வியாக்யானங்களைச் செய்பவர்களை விட, களத்தில் முன்னணியில் நின்று தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சேவை செய்யும் சேவாதளத்தினரை மனிதர்  என்ற சொல்லால் மட்டும் விளக்க முடியுமா? இவர்களின் அருங்குணத்தை எப்படி விவரிப்பது? எப்படி இவர்களுக்கு ஈடு கட்டுவது?
மாட்டு வண்டி, குதிரை வண்டியிலிருந்து, சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், ரயில், விமானம் என பல்வேறு பயண சாதனங்களைக் கண்டாலும் கூட அவற்றைப் பயன்படுத்த முடியாமல் செய்ய ஒரு சின்ன ‘மரணம் வந்து விடுமோ’ என்ற பீதி போதும் என்பது என்ன ஒரு விசித்திரம்?!
அமைதி தரும் ஆலயங்களும் மூடப்படும் என்பது அதிசயமாக இல்லை?
சேர்ந்து வாழும் சமூகத்தை, தூர தள்ளி இருக்க வேண்டிய சமூகமாக, - சோஷியல் டிஸ்டன்ஸிங் என்ற புதிய நடத்தை கொண்ட சமூகமாக, ஒரு சின்ன வைரஸ் மாற்ற முடியும் என்பதை இதுவரை நம்பி இருப்போமா?
என்றாலும் கூட மனிதகுலத்திற்கு - நல்லோருக்கு - ஒரே ஒரு நல்ல , பெரிய நம்பிக்கை உள்ளது:-
அது இது தான்!
வேயுறு தோளி பங்கன் - திருஞானசம்பந்தர் அருளிய பதிகம்)
சர்வே ஜனா சுகினோ பவந்து: |
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
மனித குலம் வாழ்க! மனித குலம் வெல்க!!
tags -- கொரானா , பாடங்கள்

No comments:

Post a Comment