Sunday, March 29, 2020

காலை உணவுகளின், 'சாம்பியன்!'

காலை உணவுகளின், 'சாம்பியன்!'

Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29மார்
2020
00:00
மார்ச் 30 உலக இட்லி தினம்

இந்தியாவில் உள்ள நான்கு பெரு நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், ஆரோக்கியமான காலை உணவு பட்டியலில், முதலிடம் பிடித்தது, இட்லி தான். எல்லா காலத்திலும், அனைத்து வயதினரும் சாப்பிட உகந்த உணவு இட்லி என்பதை, அனைத்து மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் ஏற்று, அதை சாப்பிடவும் பரிந்துரைக்கின்றனர்.
சராசரி இட்லி ஒன்றின் கலோரி அளவு, வெறும், 39 தான். 2 கிராம் புரதம், 8 கிராம், கார்போஹைட்ரேட், 2 கிராம் நார்ச்சத்து, 1 மில்லி கிராம் இரும்பு சத்து, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் சிலவும் உள்ளன. தீமை செய்யும் கொழுப்பு எதுவும் இல்லை.
புரோட்டின் நிறைந்த உணவு, இட்லி. காரணம், இதில் உள்ள அரிசி மற்றும் உளுந்து கலவை. 12 மணி நேரம் ஊற வைப்பதால், மாவாகி புளித்த பின், 'புரோ பையோடிக்ஸ்' எனும் நுண்ணுயிர் கலந்த உணவாக மாறி விடுகிறது. உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் மற்றும் ஈஸ்ட் கலந்த உணவாக இட்லி மாறி விடுவதால், எளிதில் செரிமானமாகி விடுகிறது. செரிமான சக்தி குறைந்தவர்களுக்கு, மிகச்சிறந்த உணவு, இது.
குடலில் தோன்றும் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து, செரிமான உறுப்புகள் சீராக இயங்க உதவுகிறது. பாலின் மூலம் தோன்றும், 'லாக்டோஸ்' பாதிப்பை குறைக்கிறது.
இட்லி மாவு புளித்தவுடன், அதில், வைட்டமின், 'பி12' சத்து உருவாகிறது. இது, நமக்கு தேவையான வைட்டமின் சத்துகளில் ஒன்று.
'இட்லி ஒரு, 'புரோ பையோடிக்ஸ்' உணவு என்பதால், அது, மூளையுடன் தொடர்பு கொண்டு பதற்றத்தை தவிர்க்க உதவுகிறது. மேலும், நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் நோய் எதிர்ப்பாற்றலை உடல் எளிதில் கிரகிக்க உதவுகிறது...' என்கின்றனர், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். அதனால் தான் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும், இட்லி, சிறந்த உணவு.
இட்லியுடன், சட்னி, சாம்பார் சேர்த்து சாப்பிடுவது தான் சிறந்தது. சட்னியில் இருக்கும் தேங்காய்; சாம்பாரில் பருப்பும், அதனுடன் சேரும் புளி, காய்கறிகள் மூலம், உடலுக்கு, புரதம், துத்தநாகம், மங்கனீசு, போலிக் ஆசிட், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து அடங்கிய, நோய் எதிர்ப்பாற்றல் கொண்ட உணவாகிறது.
'வீட்டில் அரைத்த இட்லி மாவு தான் சிறந்தது. அதிகம் புளித்த மாவை உபயோகப்படுத்தக் கூடாது...' என்கின்றனர், ஆய்வாளர்கள்.
இந்தோனேஷியாவில் இருந்து, கி.பி.800க்கு பின், இந்தியாவில் அறிமுகமான இட்லி, தற்போது, தென் மாநிலத்தின், 'நம்பர் ஒன்' காலை உணவு பட்டியலில் உள்ளது.
சென்னையில், 2013ல் மட்டும், ஓட்டல்களில், 7.8 கோடி இட்லிகள் விற்பனையானது, சாதனையாக கருதப்படுகிறது.
இப்போது, ஓட்டல்களில், நாள் ஒன்றுக்கு, சராசரியாக, 2 - 3 லட்சம் இட்லிகள் விற்பனையாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவீ.ராஜேந்திரன்

No comments:

Post a Comment